பற்றிப் படர்ந்த பசுங்கொடியைக் காட்டினேன் முற்றச் சிவந்த முகஞ்சிவந்து நாணத்தால் என்குறிப்பை மாற்ற ‘எழிலருவி பாரு’ மென்றாள் தன்குறிப்பை நானுணர்ந்து தையால்உன் கண்போலும் நீலக் கருங்குவளை நெஞ்சாற் பிணைந்தநமைக் கோல இதழ்திறந்து கூர்ப்பாக நோக்குதல்பார்! என்றுநான் காட்ட, ‘இதழ்தந்த தாமரையை நின்று தவிக்கவிட்டு நீள்சுனைக்குத் தாவிவரும் வண்டொன் றருகிருந்து வாய்சூழல் பாரு’மென்றாள்; கண்டனத்தைக் கண்டுகொண்டேன் கைதந்த நல்லாரை வஞ்சித்துக் கைவிட்ட வண்டுச் செயலினைநான் நெஞ்சத்துங் காணும் நினைப்பில்லேன் என்னுங்கால் பிரிவு குன்றத்தார் *தொண்டகம் கொட்டும் பறையொலியைக் குன்றத்தாள் கேட்டுக் ‘குலத்தலைவர் வந்துவிட்டார் இன்றுபோய் நாளை இவண்வருவீர்’ என்றுரைக்க நன்றாம் எனப்பிரிந்தேன் நான். தலைவர்:புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் தலைப்பு:குறிஞ்சி இடம்:அண்ணல் சுப்பிரமணியனார் மணிவிழா புதுக்கோட்டை நாள்:19-10-1958
*தொண்டகம் - குறிஞ்சி நிலப் பறை |