எண்சீர் விருத்தம் நின்னுடலில் தென்னாட்டுக் கருமை கண்டேன் நெஞ்சத்தில் சொல்லரிய செம்மை கண்டேன் நின்சொல்லில் நிலைத்திருக்கும் உண்மை கண்டேன் நீயுடுத்தும் ஆடையினில் வெண்மை கண்டேன் பொன்விரும்பாப் புகழ்விரும்பாத் தொண்டு ளத்தால் புரிகின்ற செயலிலெலாம் நன்மை கண்டேன் எந்நிலையும் எப்பொழுதும் அன்பா! நின்றன் இயல்புடைய வாழ்க்கையினில் குறளைக் கண்டேன்(3) ஆடவர்கள் எந்நிலத்து நல்லர் உள்ளார் அந்நிலத்தை நன்னிலமென் றவ்வை சொன்னாள்; தேடரிய செயல்வீர! சுப்ர மண்யச் செம்மலுன்னால் புதுக்கோட்டை புதிய கோட்டை நாடறிய ஆயிற்று; நின்னால் மேலும் நல்லவரும் பலரானார்; ஊர்கள் தோறும் பாடுபட ஓரொருவர் நின்போல் தோன்றின் பழம்பெருமை பேச்சிலன்றிச் செயலிற் காண்போம்(4) இந்நாளில் ஒருசிறிய நன்மை செய்தோர் இருநிலத்தார் அறியும்வகை எடுத்து ரைப்பர் பொன்னோடு புகழ்விரும்பிச் செய்தித் தாளில் புகழ்ந்தெழுதப் பொருள்கொடுப்பர்; பொய்ம்மை யன்று; முன்னாக நாற்பஃதாண் டெல்லை நீயே முனைந்திருந்து நற்பணிகள் ஆற்று கின்றாய்! இந்நாளும் பிறரறியா தடக்கி வைத்தாய்! என்போல்வார் பாட்டுக்கு மறைந்தா போகும்?(5) இவ்வுலகில் தீமையைத்தான் மறைத்துச் செய்வர்; நன்மைகளை ஏன்மறைத்துச் செய்கின் றாய்நீ? செவ்வியனே நீமறைத்துச் செயினும் எங்கள் சிறுசெந்நா பறையறைந்து யாண்டும் சாற்றும்; ஒவ்வியதே நின்னடக்கம் பெருமை காட்டும்; உலகுக்கு நாங்கள்சொலல் நன்றி காட்டும்; எவ்வகையால் முயன்றாலும் புலவன் நாவைத் தடைப்படுத்த இயலுவதோ? அடங்கா தன்றோ!(6)
|