பக்கம் எண் :

90கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

சொல்லாளன் பாரதிதான் வெற்றிச் சங்கம்
    துணிந்தூதி விட்டாலும் தோல்வி கண்டான்;

இல்லாத சாதிகளுக் கின்னும் ஆட்சி
    எங்கெங்கும் காணுகின்றோம் சாதிச் சூழ்ச்சி(15)

தோற்றாலும் வீரமுளான் ஓய்தல் கொள்ளான்
    மீண்டும்போர் தொடுப்பதற்கே எண்ணங் கொள்வான்;

ஆற்றல்மிகும் பாரதியும் சாதிப் போரில்
    ஆணினத்தை நம்பியதால் தோல்வி கண்டான்

நாற்றமிகு சமுதாயச் சழக்க கற்ற
    நாரியரைக் குழந்தைகளை அண்டி நின்றே

“ஏற்றமென்றும் தாழ்ச்சியென்றும் சாதி கூறல்
    இல்லையடி பாவமடி பாப்பா” என்றான்.(16)

வளர்ந்துவரும் பரம்பரைக்கு வீரம் ஊட்டின்
    வாகைபெறும் நாளைக்குச் சாதிப் போரில்;

தளர்ந்தொழியும் அப்பகைமை இந்த நாட்டில்;
    சமத்துவந்தான் வளர்ந்துவரும் என்று நம்பிக்

களங்கண்டான்; பாரதியைப் போற்று கின்ற
    காசினியீர்! பிறவியினால் உயர்வும் தாழ்வும்

உளங்கொண்டு வாழ்வீரேல் மீண்டும் தோற்பான்;
    உரமுடையன் அவன்வெல்வான் சாதி தோற்றால்;(17)

உண்மைத் தெய்வம்

கடவுளர்தம் பெயராலே பகைமை காட்டிக்
    கணக்கில்லாத் தேவுகளைப் படைத்துக் கூட்டி

மடமையிலே மூழ்கிஇருள் சூழ நெஞ்சம்
    மயங்குகையில் இளம்பரிதி என்னத் தோன்றி