பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 91

“அடகெடுவீர்! அறிவிலிகாள்! உண்மை ஒன்றே
    ஆண்டவனாம் பிறவெல்லாம் பொய்யாம்” என்று

திடமுடைய வீரனலால் வேறு யார்தான்
    தெளிந்துரைக்க வல்லார்கள்? வாழ்க வீரன்!(18)

போர் முழக்கம்

மாதர்தமை இழிவுசெய்யும் மடமைக் கோட்டை
    மதிலிடிந்து பொடியாகத் தகர்ப்போம் மாய்ப்போம்

வேதமுறை பழையமுறை என்று சொல்லி
    விரைந்தெழுந்தால் தீயிட்டுக் கொளுத்தி மாய்ப்போம்

*தாதமுறை ஆணுக்கு வேண்டா என்றால்
    தையலர்க்கும் அம்முறையை வேண்டா என்போம்

காதலர்க்குக் கற்புமுறை பொதுவில் வைப்போம்
    கண்ணிரண்டும் சரிசமமாக் காண்போம் என்றான்(19)

வாழ்க வீரம்!

அரசியலில் வீரனவன் சமுதா யத்தின்
    ஆணவத்தைத் தகர்த்தெரியும் வீரன் ஆவன்

முரசொலியை முழக்குகின்ற தமிழின் வீரன்
    மூத்ததமிழ்க் கவிவீரன் பாடல் தன்னைப்

பரசிநிதம் போற்றலுடன் அவன்வ குத்த
    பண்புடைய நெறியினில்நாம் செல்ல வேண்டும்

சுருதிவிட்டுப் பாடாமல் நேர்மை செய்வோம்
    தூய்மைமிகு வீரத்தை வாழ்த்து வோமே.(20)

தலைப்பு:பாரதி - வீரன்

இடம்:இந்து மதாபிமான சங்கம் - காரைக்குடி

நாள்:1-11-1958


*தாதமுறை - அடிமை முறை