15. திராவிடநாட்டின் வளம் கலிவெண்பா நீலக் கடலில் நிமிர்ந்தெழும்பும் பேரலைகள் கோலத் தமிழ்கேட்கக் கூடிவரும் நீள்கரையில் காணுந் திருநகராம் காரைக்கால் மூதூரில் பேணும் படியமைந்த பேரரங்க மாநாட்டில் முத்தமிழாம் தேன்பருக முன்னித் திரண்டெழுந்தே இத்திடலில் மொய்க்கும் இருபாலீர்! என்வணக்கம் ஆரியப் போர்கடக்க ஆர்க்கும் நெடுஞ்செழிய!* வீரியப் போர்தொடுக்கும் வெற்றித் திராவிடர்காள்! நாட்டின் வளமெல்லாம் நாடித் தொகுத்தெடுத்துப் பாட்டின் வளத்தாற் படைக்கின்றேன் இவ்வரங்கில் எல்லை வளம் கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே இவ்வுலகில் முற்றோன்றி மூத்த குடியுடைய தொன்மையதாய்க்; கையால் கருத்துரைத்த காலங் கடந்தேகப் பையவே நாவசைத்த பாங்கில் நடைபயின்று, பண்பாடிக் கூத்தாடிப் பாரெங்கும் சென்றோடிப் பண்பாடு காட்டிப் பயிற்றுவிக்கும் தாயகமாய்த், தெற்கில் குமரியொடு சேரா வடதிசையில் நிற்கும் ஒருவிந்தம் நீள்கடல்கள் கீழ்மேலாய்,
* அரங்கிலிருந்த நாவலர் நெடுஞ்செழியன் |