உச்சி மலைவெடிப்பின் உள்ளிருந்து போந்துபல பச்சிலைகள் தண்மலர்கள் பற்றிக் கொடுவந்து தத்தித் தவழ்ந்து தடைசெய்யும் பாறைகளைக் குத்திப் பிளந்து குதித்தோடி மேலிருந்து தார்முரசம் என்னத் தடதடவென் றார்த்திரங்கிக் கார்முழக்கம் அஞ்சக் கடுகிவரும் பேரருவிக் கூட்டம் பலவுண்டு; கூடி முகிலினங்கள் காட்டகத்து மேய்வனபோல் காணும் களிறீட்டம்; தேக்கும் அகிலும் திரண்டுருண்ட சந்தனமும் காக்கும் குளிர்தென்றல் கார மிளகுடனே ஏலம் இவைபோன்ற எஞ்சா வளஞ்சுரந்து காலம் முழுதும் களிப்பிக்கும் நம்நாடு; முல்லை வளம் கூர்த்துக் கிளைத்தெழுந்த கொம்புடைய கொல்லேற்றைச் சேர்த்துப் பிடித்துத் திணறவைக்கும் காளையர்கள் வீரவிளை யாட்டால் விரும்பும் குலமகளைச் சேர மணமுடிக்கும் செம்புலத்துக் காடெல்லாம், இல்லை எனவுரையா தீத்துவக்கும் வள்ளலைப்போல் முல்லை முறுவலித்து மொய்க்கும் சுரும்புகளுக் கின்சுவைத்தேன் உண்பித் தினிதிருக்கும் முல்லைநிலம் புன்செய்ப் பயிர்வளங்கள் பூரிக்கும் கானகத்துக் *கோவலர்தம் செவ்வாய்க் குழலோசை கேட்டவுடன் ஆவலுடன் ஓடிவரும் ஆனிரைகள் சேர்நாடு; மருத வளம் சேற்றில் உழுது சிறுநெல் விதைதூவி நாற்றுப் பிடுங்கி நடுகாலில் நட்டுக் களையெடுத்து நீர்பாய்ச்சிக் காப்பதனால் நன்கு விளைகழனிச் செந்நெல் வியனுலகைக் காக்குமகம்;
*வெந்காட்டி - புறங்காட்டி |