பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்105

2
மனிதனைத் தேடுகிறேன்....

எண்சீர் விருத்தம்

மானுடத்தை உலகெங்குந் தேடித் தேடி
      மனமயங்கிச் சோர்வுற்றுத் தளர்ந்தே னன்றி
நானெடுத்த முயற்சியிலே வெற்றி காணேன்;
      நடுத்தெருவில் பகற்பொழுதில் விளக்கெ டுத்தே
ஊனொடுக்கங் கொண்டவுடற் கிழவர் ஓர்நாள்
      ஒவ்வொருவர் முகம்பார்த்துஞ் சலிப்புக் கொண்டு
மானுடத்தைக் காணவிலை என்ற யர்ந்த
      மதிமிகுந்த கதையைத்தான் நினைவிற் கொண்டேன்.

அணுவெடுத்தான் பிளந்துடைத்தான் அதனைக் கண்டேன்
      அடடாஓ! எனவியந்தேன்; அறிவால் பெற்ற
துணிவெடுத்தே அண்டத்தைத் தூள்தூள் ஆக்கத்
      தொடங்கிவிட்டான் அன்பினையே உடைத்து விட்டான்
கணுவடுத்த மூங்கில்மரம் தான்பி றந்த
      காட்டகத்தை எரிப்பதுபோல் ஆகி விட்டான்
பிணமடுத்த காடாக உலகை யாக்கும்
      பேதைமைகண் டையோவென் றலறு கின்றேன்.

விண்மதியை மிதித்துவிட்டான் மானு டத்தின்
      வெற்றியென மகிழ்ந்திருந்தேன் வியந்து நின்றேன்;
*ஒண்மதியை மிதித்துவிட்டான் மானு டத்தின்
      ஒருதோல்வி எனத்தளர்ந்தேன் ஓய்ந்து நின்றேன்;


*ஒண்மதி - அறிவு