மற்றவர்தம் துன்பத்தைக் காணும் போது மனமுருகி விரைந்தணுகி அதனை நீக்கக் கற்றவனே கற்றவனாம்; உதவும் பண்பைக் கல்லாதான் கல்விபல கற்றா னேனும் முற்றியநல் மரம்போல்வான்; மரத்தில் ஒன்று முரிந்தொடிந்து வீழ்ந்திடுமேல் நிற்கும் ஒன்று மற்றதற்கு மனமிரங்கி உதவ லுண்டோ? மானிடனும் அவ்வாறு நிற்றல் நன்றோ? மற்றவர்க்கே உரியதனைக் கவர்வ தற்கு மனத்தாலே நினைத்தாலும் கவர்ந்த தைப்போல் குற்றமெனக் கருதுகின்ற உணர்வு வேண்டும்; குறைவறியா அறநூல்கள் உரைத்த வற்றைக் கற்றபடி கடைப்பிடித்து நடத்தல் வேண்டும்; கற்றவர்கள், பெரியவர்கள், தந்தை தாயர் சொற்றபடி நடக்கின்ற ஆர்வம் வேண்டும்; தூய்மையிலே தோய்கின்ற நெஞ்சம் வேண்டும், சாதியினால் பதவியினால் சமயப் போக்கால் தாழ்ந்தவரும் உயர்ந்தவரும் இல்லை யென்றே ஓதுவதாற் பயனில்லை; உள்ளம் ஒன்றி உடன்பிறப்பென் றனைவரையுஞ் சமமாக் கொண்டு மேதினியில் வாழ்வதுதான் மானி டர்க்கு மேன்மைதருஞ் செயலாகும் மேல்கீழ் எல்லாம் வேதமொழி எனவந்தால் மக்கள் இங்கு வேறாகி மாக்களென நீண்டு நிற்பர். கடமைசெயத் தயங்குகிறோம்; கண்ணி யத்தைக் காற்றின்மிசைப் பறக்கவிட்டோம்; கட்டுப் பாட்டை அடிமைநிலை எனக்கருதி உதறி விட்டோம்; ஆதலினால் மானுடத்தைச் சீர ழித்தோம்; கெடுவினையை விட்டொழித்தால் அருவ ருக்கும் கீழ்மைதனைச் சுட்டெரித்தால், இருளில் வீழ்த்தும் மடமையினைத் தகர்த்தெறிந்தால், மக்கட் பண்பை மதித்திருந்தால் மானுடமே வெல்லும் வெல்லும். |