பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்109

திறமிகுந்த அரசியலைப் பாழ டித்தார்
      தீவினைகள் அடிதடிகள் சூது வஞ்சம்
உருவெடுத்து வரச்செய்தார்; தனிந லத்தை
      உயிர்ப்பிக்கும் நிலைக்களனாக் கொண்டு விட்டார்.

பட்டறிவும் நுண்மதியும் பொதுந லத்தைப்
      பரிவுடனே புரிகின்ற தூய நெஞ்சும்
எட்டுணையும் அஞ்சாத துணிவுங் கொண்டோர்
      எவர்அவரே அரசியலிற் புகுதல் வேண்டும்
பட்டம்விடுஞ் சிறுவர்களும், பள்ளி சென்று
      பயில்பவரும், குழப்பங்கள் விளைவிப் பாரும்,
கட்டவிழ்ந்த காளையரும் புகுந்து விட்டால்
      கலகமலால் மற்றென்ன விளையும் அங்கே?

நன்றெனினுந் தீதெனினுந் தமது செய்கை
      நாட்டைத்தான் சாருமென நினையா ராகித்
தின்றலையும் வாழ்வுக்கே அடிய ரானார்
      சிறிதேனும் நாட்டுணர்வும் இல்லா ரானார்;
ஒன்றுணர்வால் இணைந்ததுபோல் இணைந்தி ருப்பர்
      உள்ளத்தே நஞ்சதனை மறைத்தி ருப்பர்
கொன்றனைய செய்தற்கும் கூசா மாந்தர்
      *குய்யங்கள் அரசியலில் விளைத்து நிற்பர்.

எங்கெங்கும் வேலையில்லை. வாழ்வுக் காக
      ஏதொன்றும் வழியில்லை, பிழைக்க வேண்டி
அங்கங்கே அவரவர்தம் தகுதிக் கேற்ப
      அமைந்ததொரு வழியைத்தான் தேர்ந்து கொண்டார்;
இங்கிதனைத் தொண்டென்று சொல்லிக் கொள்வார்
      இதுதவிர வேறுபொருள் தெரியக் காணேன்
தங்குகிற நிழலாகத் தொண்டைக் கொண்டார்
      தன்னலத்தை வளர்க்கின்ற வயலாக் கொண்டார்.


*குய்யங்கள் - வஞ்சனைகள்