110 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
4 அரசியல் அரங்கம் நண்பரும் பகையாய் நலிவுகள் தரலாம், பகைவரும் நண்பாய்ப் பரிவுடன் வரலாம் இருவரும் ஒருநாள் மாறலும் மாறலாம், அரசியல் மேடை உரைசெயும் பாடம் ஈதென உணர்ந்தனம்; ஆதலின் அவர்தாம் தீதெனப் பழித்தும் மேலென உயர்த்தும் மேடையில் உரைப்பன மெய்ம்மைகள் ஆகா; நாடக மொழியென நம்புதும் யாமே; இனமொழி நாடென இயம்புவர் ஒருநாள்; மனமொழி மாறி மயங்குவர் மறுநாள்; தொண்டெனும் போர்வையில் தோன்றுவோர் பலராய் மண்டித் திரிதலின் மக்களும் மயங்கினர் மெய்ம்மையை மறைக்கும் பொய்ம்மைகள் பல்கலால் பொய்யெது மெய்யெது புலப்படா தொழிந்தன; அதனால் ஒருவரை அளவின் றுயர்த்தலும் இலமே ஒருவரை இகழ்தல் அதனினும் இலமே. 16.4.1978 |