5 வண்ணமும் எண்ணமும் செங்கதிரோன் கீழ்வானில் முகத்தைக் காட்டிச் செவ்வொளியால் உலகுக்கு வண்ணம் பூசிப் பொங்கிவரும் பேரெழிலைப் படைக்கும் போது பொதியத்து மலைச்சரால் கண்டு நின்றேன்; அங்கிருக்கும் அழகெல்லாம் விழியா லுண்டேன் அடடாஓ! அடடாஓ! என்று நெஞ்சம் பொங்கியதாற் கவியானேன்; ஆடிப் பாடிப் புகலரிய இன்பத்தில் திளைத்து நின்றேன். கொடிவிரித்த மலர்கண்டேன் கிளையில் நீரில் குலவுகின்ற மலர்கண்டேன் தலைய சைத்துச் செடிசிரிக்கும் மலர்கண்டேன் அவற்றி லெல்லாம் செப்பரிய வண்ணங்கள் சிந்தை யீர்க்கும் படியிருக்கக் கண்டுகளி கொண்டேன்; காற்றில் பரவிவரும் நன்மணத்தில் ஒன்றி நின்றேன்; செடிகொடியில் இதழ்விரித்த மலர்கள் தோறும் தேனீக்கள் படிந்தெழுந்து போதல் கண்டேன். இதழ்சுவைத்து நறவருந்தி விரைந்து சேர்க்கும் ஈகண்டேன் எழுத்தாளர் நினைவு கொண்டேன்; கதவடைத்த கற்பனையைத் திறந்து புக்குக் கருத்துடனே சிந்தனையாம் மலர்தி ளைத்துப் |