வண்ணங்கள் பலபூசிப் பகலோன் வானில் வடிவழகு செய்கின்ற மாலை வேளை எண்ணங்கள் சுழன்றாட நடந்து சென்றேன்; இசைகலந்த சொன்மாரி பொழியக் கேட்டேன்; வண்ணமிலான் வடிவமிலான் இறைவன் என்பர் மங்கைக்குப் பங்களித்த கடவுள் மேனி வண்ணத்திற் சரிபாதி கருப்பு, மற்றை வடிவமெனும் ஒருபாதி சிவப்பாம்’ என்றார். கருப்புநிறம் சிவப்புநிறம் கலந்த மேனிக் கடவுளவன் தென்னாட்டுக் குரியன் என்றார்; விருப்பமுடன் செவியேற்ற என்றன் சிந்தை விடுதலையில் அரசியலில் விரைந்த தங்கே; கருப்புடனே சிவப்புநிறம் கலந்து வானில் காட்சிதரும் இருவண்ணக் கொடியே இங்கும் பொறுப்புடனே தென்னாட்டுக் குரிய தாகும் புகுந்தவையே பிறவெல்லாம் எனநி னைந்தேன். எழுத்தாளர் மன்றம் மதுரை 22.7.1962 |