7 தேர்தல் திருவிழா (கலிவெண்பா) தேர்தல் திருவிழா என்றிங்குச் செப்பிவைத்த சீர்மை மிகநன்று; சீர்தூக்கிப் பார்த்திடுவோம்; உள்ளூறும் அன்பால் உருகும் அடியவரும் *அள்ளூறி நின்றிருப்பர் அந்தத் திருநாளில்; உள்ளத்தில் வஞ்சம் ஒளித்தமைத்துச் செய்கின்ற கள்ளத்தை யாருமே காணா வகைசெய்யப் பூச்சால் மணியால் பொதிந்த திருமேனி ஆச்சார சீலர் அவரும் அருகிருப்பர்; தின்பண்டம் விற்போரும் செய்தசிறு பாவைகளை முன்வந்து விற்போரும் மொய்த்தங்கு நிற்றலுண்டு; ஆண்பாலர் பெண்பாலர் ஆடுஞ் சிறுபாலர் காண்பார் பெரும்பாலோர் கைகளையும் பைகளையும் கண்ணால் துருவுகின்ற கைவரிசைக் காரர்களும் பின்னால் தொடர்ந்து பெரியவர்போல் நின்றிருப்பர்; காதுகளும் நோவாமல் யாருமதைக் காணாமல் மோதுகிற கத்திரியும் முன்னிற்கும்; அஃதேபோல் நாட்டுக்குத் தொண்டுசெயும் நல்லெண்ணங் கொண்டோரும் வேட்டிங்குத் தேர்தலிலே வேட்பாளர் ஆவதுண்டு; நாளெல்லாம் ஊரார்பால் நம்பும் படிபேசி வாழ்வெல்லாம் பொய்க்கின்ற வஞ்சம் தனைமறைக்கச் சட்டைத் துணிமாற்றி தாயகத்தைக் காப்பனென ஒட்டித் திரிகின்ற உத்தமரும் நிற்பதுண்டு; வீரங்கள் பேசிவிட்டு வேட்பாள ராய்நின்று
*அள்ளூறி - மனமுருகி |