பக்கம் எண் :

116கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

பேரங்கள் பேசும் பெருமனிதர் தாமுமுண்டு;
விண்ணப்பந் தந்துவிட்டு வீட்டிற்குச் சென்றவுடன்
எண்ணத்தில் சூழ்ச்சிமுறை எத்துணையோ எண்ணியெண்ணி
எங்குப் பணங்கிடைக்கும் என்று தவங்கிடக்கும்
தங்கக் குணம்படைத்தோர் தாளுருவங் கண்டவுடன்
முன்வாங்கிக் கொண்டு முகமூடிச் சென்றுடனே
பின்வாங்கிப் போய்ப் பதுங்கும் பேதையருங் காண்பதுண்டு;
முன்னாளில் இந்நாட்டில் தேர்தல் நடந்ததுண்டு-
அந்நாளில் தென்னாட்டார் ஆக்கிவைத்த தேர்வுமுறை
எந்நாடுங் காணாத ஏற்றந் தருமுறையாம்
அன்னார் குடவோலை என்றே அதைச்சொல்வர்
தக்கர்யார் நிற்கத் தகுதியிலார் யாரென்றே
அக்கால மக்கள் அமைத்த விதியுண்டு;
கையூட்டுப் பெற்றார், களவாடல் செய்தவர்கள்,
பொய்ச்சான்று சொன்னோர் புகுந்தகுதி யில்லாரே
என்றுரைத்த சட்டத்தை இன்றெடுத்து நோக்குவமேல்
நின்றிங்கு மிஞ்சுபவர் நேர்பாதி காண்பரிது;
தொண்டறியார் ஆட்சிமுறை கண்டறியார் தங்கருத்தை
விண்டறியார் ஆனாலும் வேட்பாளர் ஆகிநின்று
மக்கள் தமையணுகி மாயங்கள் செய்வதெலாம்
மிக்க நகையாகும்; மேட்டுக் குடிவாணர்
வீட்டுக்கு வீடு வெளிநின்று பல்லெல்லாம்
காட்டுதற்கு நாணார்; கலிகாணா மேனி
வளையும் குழையும் வணங்கித் துவண்டு
நெளியும் மறுநாள் நிமிரும் அடடா!
நடக்காத கால்கள் நடந்துவரும், ஒன்றுங்
கொடுக்காத கைகள் கொடுத்துவரும்; தேர்தலிலே
வாக்காளர் எல்லோரும் வானுறையுந் தெய்வங்கள்
பார்க்காத பேரெல்லாம் பார்த்திடுவர் கும்பிடுவர்;
வெற்றி கிடைத்துவிடின் வேட்பாளர் மேலாவர்
வெற்றுப் படிக்கல்லாய் வீழ்ந்திடுவர் வாக்காளர்;
மாண்டவரும் மீண்டுவரும் மாய விளையாட்டைக்
காண்டல் எளிதாகும் இந்தத் திருநாளில்;
விந்தைமிகும் வேடிக்கை எத்துணையோ தேர்தலெனும்
சந்தையிலே காணும், சதிகள் விளையாடும்;
நிற்பவர்கள் நிற்கட்டும் நேர்மை நிலைநாட்டல்
கற்றவர்க்கும் மற்றவர்க்கும் உற்ற கடனாகும்;
தீட்டுகிற திட்டத்தால் ஈட்டும் வளமெல்லாம்
நாட்டில் ஒருதிசையில் நன்கு வளர்ப்பவர்தாம்
தேய ஒருமைஎன்று தீந்தமிழை மாய்ப்பதற்கே
ஆய வழிவகைகள் ஆற்றும் நிலைகண்டோம்;
இந்தி மொழியொன்றை இங்கே திணிக்கின்றார்
அந்தநிலை போதாதென் றன்று தமிழ்மாந்தர்
ஆய்ந்தமைந்த நல்லெழுத்தை அப்படியே நீக்கிவிட்டுக்
காய்ந்து சிறுகயிற்றில் தொங்குகிற *கண்டம்போல்
நேர்கோட்டில் தொங்கும் நெளிவெழுத்தைக் காட்டுகிறார்
யார்கேட்பர் இந்நாட்டில் என்னும் நினைவவர்க்கு;
நம்பால் இவர்தாமும் நல்வாக்குக் கேட்கின்றார்;
வெம்பி யிருக்கையில் வேறோர் திசைதன்னில்
நாட்டில் தருமம் நலிந்ததென்று கண்கலங்கி
நாட்ட வருகின்றார் நான்கு வகைத்தருமம்;
தந்திரத்தால் நல்ல தருமத்தின் பேர்சொல்லி
மந்திரங்கள் ஓதி வருபவரைக் காண்கின்றோம்;
தாய்நாட்டுப் பற்றினிலும் தாய்மொழியின் அன்பினிலும்
சேய்நாட்டுப் பற்றுமிகுஞ் சிந்தையரும் கேட்கின்றார்;
‘அன்று முடியரசர் ஆண்ட திருநாட்டை
இன்று பெறுவோம் இனவழியில் ஒன்றாவோம்’
என்று முரசார்த் தியங்குகிற ஓரணியில்
நின்றுபணி செய்வோரும் நேர்நின்று நம்மிடத்தே
‘உங்கள்நல் வாக்கை உவந்தே கொடுத்திடுக


*கண்டம் - உப்புக் கண்டம்.