பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்117

எங்கட்கே என்றுநமைக் கேட்கின்றார் இந்நாளில்;
யாருக்கு வாக்களிப்போம் என்றுமிகச் சிந்தித்துப்
பாருக்கு நன்மைதரும் பான்மைதனை மேற்கொள்க!
காசு பணங்காட்டிக் கைநீட்டிக் கேட்பவரை
வீசி எறிந்திடுக! விற்காதீர் தன்மானம்!
நாளைக் கொருகொள்கை பேசும் நயவஞ்சர்
தாளைப் பிடிப்பார்கள் தந்து கெடுக்காதீர்!
நாட்டைத் திருத்திடுவேன் என்று நமைஏய்ப்பர்
வீட்டைப் புதுக்கலன்றி வேறொன்றும் தாமறியார்
ஆங்கவர்க்கும் வாக்கை யளிக்காதீர்! சாதிஎனும்
நீங்காப் பெருநோயை நேர்நிறுத்திக் கேட்பவர்க்கும்
கண்ணோட்டங் காட்டாதீர்! காட்டிவிடின் தன்தலைமேல்
மண்வாரிப் போடும் மதயானை போலாவீர்;
ஆதலினால் எப்பிழைக்கும் ஆளாகிப் போகாமல்
தீதறியா நல்லோரைத் தேர்தலிலே கண்டறிக!
சாதி சமயமென்று தாழ்வுயர்வு சாற்றுதலை
மோதித் தகர்த்தெறியும் முன்னேற்றப் பண்பினரை,
ஏழைமையைப் போக்கி இனிமைமிகும் வாழ்வுதரும்
தோழமையை நெஞ்சில் துணையாகக் கொண்டவரை,
செந்தமிழின் ஆக்கஞ் சிதையாமல் காப்பவரை,
நொந்திருக்கும் நாட்டவரின் நோவைத் தணிப்பவரை,
கற்றவரைத் தந்நலங்கள் அற்றவரை மெய்யொன்றே
சொற்றவரைத் தூயவரைத் தொண்டுள்ளம் பெற்றவரை
நன்றாய்ந்து தேர்ந்தெடுத்து நாடாளச் செய்வோமேல்
நன்றாக வாழும்நம் நாடு.

தியாகராசர் கல்லூரி - மதுரை
27.1.1962