பக்கம் எண் :

118கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

8
சிலம்பட்டும் போர்முரசு!

(பாகித்தான் தொடுத்த போரில் இந்தியாவின் வெற்றி கண்டு பாடியது)

மதவுணர்ச்சி ஒருபுறத்தே ஒதுங்கி நிற்க
      மானமிகு மொழியுணர்ச்சி நிமிர்ந்து நிற்கப்
புதுமலர்ச்சி கொண்டெழுந்தே உரிமை வேண்டிப்
      போர்முரசு கொட்டியது கிழக்கு வங்கம்;
விதிர்விதிர்த்துக் கொதித்தெழுந்த யாகி யாகான்
      வீரத்தை மறந்துவிட்டு வீம்புக் காகக்
கொதிகலத்திற் கையிட்டான்; வங்க மக்கள்
      குருதிதனைப் பருகுதற்கு வெறியுங் கொண்டான்;

போர்வெறியன் ஏவிவிட்ட படையின் கூட்டம்
      புன்மைமிகும் வெறியாட்டம் ஆடக் கண்டோம்;
கார்குழலார் கற்பழித்துக் கொடுமை செய்து
      கருவுற்ற மாதர்தமைச் சீர ழித்து
நீர்வழியும் விழியுடனே குழந்தை யெல்லாம்
      நின்றலறப் பெற்றோரைச் சுட்டெ ரித்துச்
சார்மன்னன் ஆட்சியினை விஞ்சி விட்ட
      சரித்திரத்தைப் படைத்ததுகாண் அந்தக் கூட்டம்.

குண்டுமழை பொழிந்தாலும் தமது மெய்கள்
      குருதிமழை பொழிந்தாலும் கலங்கா வுள்ளங்
கொண்டெழுந்த வங்கத்தார் அஞ்சா ராகிக்
      கொடுங்கோலர் கொட்டத்தை எதிர்த்து நின்றார்;