பெண்டிழந்தார் மகவிழந்தார் வீடி ழந்தார் பெருமான மட்டுமவர் இழக்க வில்லை “கண்டிடுவோம் உரிமைபெறும் வங்க தேசம் காத்திடுவோம்” என்றெழுந்தார் சிங்க மாந்தர் தூண்டிவிடும் அமெரிக்கர் சொல்லை நம்பித் தூண்டிலுறும் புழுவான பாகித் தானம் தாண்டியது நீதிதனை; வெறியின் வேகம் தலைக்கேறி ஆடியது; தேர்தல் நாளில் வேண்டுமிவர் எனமக்கள் வாக்க ளிக்க வென்றுவரும் ரகுமானை வஞ்சப் பேச்சால் கூண்டதனில் அடைத்துவிட்டு மேடை ஏறிக் கொக்கரித்தான் அறப்போரை அறியா வீரன் முறையற்ற செயலிதுவென் றுலகை நோக்கி முறையிட்டோம் மனமுள்ள கார ணத்தால்; தரைமுற்றுஞ் சென்றுநிலை சொல்லி வந்தோம்; தவித்துவரும் மக்களுக்குப் புகலுந் தந்தோம்; வெறியுற்ற மனப்போக்கர் வலிய வந்து விண்வெளியில் பறந்துநமைத் தாக்கி நின்றார்; நெறிகெட்டு வந்தவர்க்குப் பழைய பாடம் நினைவூட்ட நிமிர்ந்தெழுந்தோம் ஒன்று பட்டோம். குண்டொன்று தலைவீழக் குருதி வெள்ளம் கொட்டிடவும் வானத்தில் பகைவன் ஊர்தி கண்டங்குச் சுட்டெரித்து வீழ்த்தி விட்டுக் கண்மலர முகமலர அதனைப் பார்த்துக் கொண்டுயிரை விட்டானே எனது நாட்டுக் கொற்றவனாம் ஆறுமுகம் அவனைப் போன்றோர் மண்டமரில் திறங்காட்டப் பாகித் தான மாவீரர் புறங்காட்ட வெற்றி கண்டோம் |