பக்கம் எண் :

12கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

‘வேதியர்கள் தாம்வாழ வகுத்து வைத்த
      வேதநெறி திராவிடத்தில் தூள் தூள்’ என்று
மோதினன் நம் பாவேந்தன்; வீதி தோறும்
      முளைப்பதலால் தூளாக வில்லை யிங்கே!

ஓருருவம் இல்லாத கடவுள் பேரால்,
      ஒவ்வாத பகைமூட்டும் மதத்தின் பேரால்.
சீரழிவு பெற்றுவரும் சமுதா யத்தைச்
      செப்பனிட வந்தஒரு பெரியார் இங்கே
ஆறறிவுப் போர்தொடுத்து மாண்ட பின்பும்
      அர்த்தமிலா எந்தமதம் மாண்ட திங்கே?
ஆரவர்போற் போராட வல்லார்?இன்னும்
      அழிவகல வில்லையெனத் துடிது டித்தேன்.

‘சாதிஎனச் சமயமென முளைத்து வந்த
      சழக்குகளை விட்டுவிட்டேன்’என்று கூறி
மேதினியில் மறுமலர்ச்சி காண வந்த
      மேன்மைமிகும் இராமலிங்கர் அருட்பா நூலை
ஓதிவரும் தொண்டருக்குப் பஞ்ச மில்லை;
      சழக்குகளை ஒழிக்கத்தான் நெஞ்ச மில்லை;
யாதினிநாம் செய்வதென எண்ணி எண்ணி
      அகமெல்லாம் துடிதுடிக்கும் வெம்பும் சோரும்

முடிவளர்ப்பர் புதர்முளைத்த செடிகள் போலே;
      முகம்மறைப்பர் மூக்குக்கண் ணாடி யாலே;
அடிமறைக்கும் தொளதொளத்த காலின் சட்டை
      அணிந்திருப்பர் பூப்பொறித்த மேலின் சட்டை;


படி-பூமி; நடை -ஒழுக்கம்.