பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே13

*படிமறப்பர், *நடைமறப்பர், தெருவிற் செல்லும்
      பாவையரை வழிமறைப்பர், கூத்த டிப்பர்;
குடிகெடுக்கும் காளைகளைக் காணும் போது
      குமுறிமிகத் துடிதுடிக்கும் எனது நெஞ்சம்

எதிர்காலம் இவர்கையில் என்று நம்பி
      இருக்கின்றார் நிகழ்காலப் பெரியோர்; ஆனால்
உதிர்காலம் போலன்றோ இளைஞர் வாழ்க்கை
      உருள்கிறது; தளிர்காலம் வருமா என்னும்
புதிர்கோலம் இடுவதனால் எனது நெஞ்சம்,
      பொழிபனியின் குளிர்கால நடுக்கம் போல
விதிர்விதிர்க்கும்; துடிதுடிக்கும் அவர்தம் நெஞ்சில்
      விடிகாலம் அரும்பிவரும் காலம் என்றோ?

புதியஅலை எனும்வலையை வீசி விட்டால்
      பொருள்பெருகும் புகழ்வளரும் என்று நம்பி
மதிதவறி எழுத்தாளர் வீழ்ந்து விட்டார்;
      மனமயக்கம் தருகின்ற காமச் சாற்றைப்
புதுமுறையிற் பிழிந்தெடுத்து வார்த்து வைத்துப்
      புத்தகங்கள் பத்திரிகை எழுதி விட்டார்;
கதையிதுவா?கலையிதுவா? இளைய நெஞ்சம்
      கருகிவிடும் வழியன்றோ எனத்து டித்தேன்

நல்லறிவைப் பண்பாட்டை ஒழுக்கந் தன்னை
      நாகரிகக் கலைவளத்தை விஞ்ஞா னத்தைச்
சொல்லுதற்குப் படைப்பாற்றல் கொண்டோன் கையில்
      சுழல்கின்ற கோலொன்றே எழுது கோலாம்;
புல்லறிவால் பொருள்பெருக்கல் ஒன்றே நோக்கிப்
      புழுத்ததெலாம் வரையுங்கோல் கன்னக் கோலாம்;
நல்லறிவைக் கெடுத்துமிகப் பொருள்ப றிக்க
      நன்மைக்கே தீவைக்கும் நெருப்புக் கோலாம்