9 உரிமையும் கடமையும் அறுசீர் விருத்தம் வேண்டுவீர் உரிமை என்றால் வெறுப்பவர் எவரு மில்லை, தாண்டிடேல் கடமை யாற்ற எனச்சொலுந் தலைவ ருண்டோ? ஈண்டிய தொழிலோர் நும்முள் இணைகுவீர் உரிமை என்றால்; வேண்டுக கடமை என்றால் விலகியே விரைந்து செல்வீர்! உழைப்பவர் நலிந்து வாட, ஒருசிலர் சுரண்டி வாழ, இழைத்திடுங் கொடுமை காணின் எதிர்த்திடும் உரிமை வேண்டும்; உழைப்பினை நல்க லின்றி உறுபயன் மட்டும் வேண்டிப் பிழைப்பதைப் பிழையே என்று பேசிடுங் கடமை வேண்டும். வீட்டினைப் புரப்ப தற்கே விரும்புவீர் உரிமை தன்னை; நாட்டினை உயர்த்து தற்குக் கடமையை நயந்த துண்டோ? |