10 எது துணிவு? நல்லவை எண்ணுக! நயம்பட எழுதுக! வல்லமை உளதேல் வாய்மையைப் பேசுக! செயலெது செய்யினும் சிறிதள வேனும் பயன்பிறர் பெறவும் நயந்தது புரிக! இவைநிகழ் பொழுதில் இடர்பல நேரினும் துவளுதல் இன்றித் தொடருதல் வேண்டும் ‘இதைத்தான் *செய்வல்’ என்றொரு வரையறை ‘இவ்வணந் தான்செயல்’ என்றொரு வரன்முறை அமைத்ததன் வண்ணம் ஆற்றிடல் வேண்டும்; நமைப்பல துயரம் நண்ணிய போதும் இமைப்பொழு தேனும் இழுக்கா வண்ணம் தொடருதல் ஒன்றே துணிவெனத் தகும்தகும்; எழுதுதல் பேசுதல் இயற்றுதல் அனைத்தும் பழுதுகள் தருமேல் பகரார் துணிவென; எதையும் செய்தல் எப்படி யுஞ்செயல் இதனைத் துணிவென ஏலார் சான்றோர்; அறநெறிச் செயல்கள் ஆற்றலே துணிவு மறநெறிச் செயலின் மறுபெயர் கயமை அதனால் துணிவே துணையெனத் தொடருக நீயே
* செய்வல் - செய்வேள் 22.12.1975 |