126 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
12 நல்ல சமையமடா! கலிவெண்பா ஒன்றே குலமென்றும் ஒன்றே கடவுளென்றும் நன்றே புரிந்து நலம்பெற்றோம் முன்னாளில்; நீறுந் திருமண்ணும் நெற்றிதனில் நாமணிந்தோம் சேரும் படியாகச் செய்தணிந்தோம் தொப்பிகளை; நெஞ்சிற் சிலுவைதனை நேராகத் தொங்கவிட்டோம் *மஞ்ஞைதருந் தோகை மதித்தெடுத்துக் கைப்பிடித்தோம்; நீண்ட சடைமுடித்தோம்; நேருந் தலைமழித்தோம்; வேண்டித் **துவர்தரித்தோம்; வேள்விக் கடன்முடித்தோம் ஊரில்லை பேரில்லை ஒன்றும் வடிவில்லை மாறில்லை ஓர்பிறப்பும் மாய்வும் உடையதிலை என்றெல்லாங் கூறும் இறைவனுக்கு வைத்தபெயர் ஒன்றிரண்டா ஓரா யிரமன்றோ! மேலுமுண்டு; பாரில் பிறக்கவைத்தோம்; பாவந் துயர்கொடுத்தோம்; தேரில் நிறுத்தித் திருமணங்கள் செய்துவைத்தோம்; ஆட்டாத ஆட்டமெலாம் ஆண்டவனை ஆட்டிவைத்தோம் பூட்டா மனக்கதவைப் பூட்டிவிட்டுப் பூசைசெய்தோம்; இன்று பலவாகி எங்கும் வளர்சமையம் நன்று புரியாமல் நாட்டில் எளியவரை ஏய்த்துப் பிழைப்போர்க் கிடமாகிப் போனதலால் பூத்தநலம் உண்டோ புகல்?
* மஞ்ஞை - மயில் **துவர் - காவியுடை |