13 கடைத் தெருவில் எண்சீர் விருத்தம் ஏகுங்கால் நடுத்தெருவில் வரிசை யாக இரண்டுகால் காளைசில நடக்கக் கண்டோம்; வேகஞ்சேர் உந்தெனினும் விலக லின்றி விளையாட்டு மொழிபேசி நகைத்துக் கூவிப் போகுங்கால் அவ்விளைஞர் செய்யுஞ் செய்கை பொல்லாங்குப் போக்காகும் என்று நெஞ்சம் வேகுங்கால், அவள்சொன்னாள் ‘மாக்க ளாக விரைகின்ற புதுமைக்கோர் அறிவிப்’பென்று. மடந்தையரைத் தெருவழியில் காணும் போது மானத்தை நாணத்தை மதித்த லின்றி நடந்தருகிற் செல்லுவதும், முறைத்துப் பார்த்து நகைப்பதுவும், ஊளையென ஓஓ வென்று தொடர்ந்துகுரல் எழுப்புவதும், எள்ளல் செய்து துரத்துவதுங் கண்டுமனம் நைந்தோம்; ‘இங்குப் படர்ந்துவரும் இச்செயல்தான் தமிழர் நாட்டுப் பண்பாட்டுக் கேட்டுக்கோர் அறிவிப் பென்றாள்’ வருத்தமுடன் வழிநடந்தோம் பெண்க ளென்னும் வடிவத்தைத் தாங்கியுள சிலரைக் கண்டோம்; பொருத்தமிலா ஒப்பனைகள், எண்ணெய் காணாப் புன்முடிகள், அரைகுறையில் அணிந்த ஆடை, |