பக்கம் எண் :

128கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

நரிக்குறவர் தந்தமணி பாசி மாலை,
      நாகரிகப் பேர்தாங்கு கடைச்ச ரக்கு,
மருட்கொளிபோல் தரித்துவரக் கண்டோம்; பெண்மை
      மானத்தின் அழிவுக்கே போதல் கண்டோம்.

பின்னரொரு கடைபுகுந்தோம், பொருள்கள் கேட்டோம்
      பெருவணிகர் இல்லைஎனப் பணிந்து ரைத்தார்;
என்னஇனிச் செய்வதென ஏங்குங் காலை
      இரட்டிப்பு விலைதந்தால் கிடைக்கு மென்றார்;
பன்னரிய நலஞ்சேரும் வாணி கத்துட்
      பகற்கொள்ளைக் கூட்டங்கள் புகுந்த தாலே
நன்னெறியிற் சீர்தூக்குங் கோலை வைத்தே
      நாணயத்தை விற்கின்ற நிலைமை கண்டோம்.

திரும்புங்காற் பிணியுற்று முதுமை யுற்றுத்
      தேடுவார் எவருமற்றுச் சோறு மற்று
நரம்புந்தோ லும்படிந்த நரைமூ தாட்டி
      நடந்துவரக் கண்டுமனம் நைந்து போனோம்;
அரும்புங்கண் ணீர்விழியில் ததும்பி நிற்க
      அங்கங்கே இரவலரும் நிற்கக் கண்டோம்;
விரைந்துலகம் கடைவழிக்கே போகும் போக்கை
      விழியிரண்டால் கண்டுருகித் திரும்பி விட்டோம்.