பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்129

14
நமது வாணிகம்

கலிவெண்பா

வங்கக் கடலகத்தே தங்கி உருவாகிப்
பொங்கும் புயலொன்று புக்குவர லாமென்று
வானொலியில் ஓர்செய்தி வந்தவுடன் வேகமுடன்
ஆன பொருளெல்லாம் அப்பாலே போய்ப்பதுங்கும்
எங்கே பதுக்குகிறார்? எப்பால் பதுக்குகிறார்?
எங்கே எவரறிவார்? இங்கே விலையேறும்;
உண்ணும் பொருளெனினும் உள்ளம் நடுங்காது
மண்ணும் பிறபொருளும் மாற்றறிய மாட்டாமல்
பண்ணுந் திறமெல்லாம் பாரறியும்; மேல்நாட்டு
மண்ணில் நமதுபுகழ் மண்மூடச் செய்துவிட்டார்;
உண்ணும் பொருளெனினும் ஓர்நாட்டுக் கேற்றுமதி
பண்ணும் பொருளெனினும் பாங்குற நாம்கலக்கும்
விந்தையினைக் கண்டு வெளிநாட்டார் தூற்றுகிறார்
நிந்தையிது வென்னும் நினைப்பில்லை வாணிகர்க்கு;
வாணிகத்திற் போற்றி வளர்த்துவரும் வெங்கொடுமை
தோணிகட்டி ஏற்றத் தொலையாது; மேலும்
கடத்தல் மறைத்தல் கலத்தல் பதுக்கல்
முடக்கல் தொழிலைந்தும் முற்றத் தெரிந்துள்ளார்;
ஐந்தொழிலும் வல்லான் அரனென் றுரைத்திடுவர்