130 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
நைந்துருகித் தோற்பான் வணிகர் நடைமுறையால்; நாணயத்தைக் கூட்டுதற்கு நாணயத்தை விற்றுவிட்டார்; வாணிகத்தின் சீர்மைதனை வாட்டி வதக்கிவிட்டார்; வாங்கும் பிறர்பொருளை வாணிகர் தம்பொருள்போல் தீங்கின்றிப் பேணிச் செயலே அறமாம் இவரோ பிறர்பொருளை ஏப்பம் இடுவார்; தவறுகள் செய்யத் தயக்கம் சிறிதுமிலார் வாணிகத்தின் பேரால் வழிப்பறிகள் செய்கின்றார்; நாணிகந்து செல்வரென நாட்டில் உலவுகின்றார் கொள்ளை யடிப்பதற்குக் கூசாப் பெருவணிகர் வெள்ளையப்பன் ஒன்றே விரும்பிக் குவிக்கின்றார்; சட்டங்கள் போட்டுள்ள சாமி படந்தொங்கும் மொட்டும் மலரும் முழநீளச் சரந்தொங்கும் பத்திக் கொருநாளும் பஞ்சம் இருந்ததிலை எத்திப் பிழைக்க இறைவன் துணையென்பார் நாட்டைக் கெடுக்கும் நயவஞ்ச வாணிகத்தைப் போட்டுப் பொசுக்கிப் புதைகுழியில் மூடிவிட்டு நாட்டுக்கு நற்பெயரை ஈட்டித் தரமுயல்க ஈட்டுந் தொழிலோர் இனி. 1.3.1970 |