பக்கம் எண் :

132கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

எதிர்த்துவரும் நீருள் எழிலாக நீந்திவந்தேன்;
ஆறும் நெடிதோடி ஆர்த்தெழும்பும் நீள்கடலுட்
சேரும் பொழுதத்துச் சீறும் அலையானேன்
பொங்கிக் கரைமோதிப் போய்த்திரும்பி ஆடுகையில்
அங்கே முகில்வரலும் ஆசைப் பெருக்கதனால்
மீண்டும் முகிலாகி மேலே தவழ்ந்தேறி
யாண்டும் திரிந்துமனம் ஆரக் குளிர்ந்ததனால்
பெய்யும் மழையானேன் பேசும் மனிதரவர்
செய்யுங் கொடுமைகளுஞ் சேராப் பிளவுகளும்
வஞ்சம் கொலைகளவு வாட்டும் வறுமைஎன
அஞ்சும் படிகண்டேன் ஐயவோ என்றரற்றி
நல்ல உலகமடா! நாகரிக மாந்தரெனச்
சொல்ல மனங்கூசும்; சூது மிகவுடையார்;
இன்ப வுலகத்தை ஈங்கிருந்து காண்பரிது
துன்ப வுலகமிது துன்பம் எனநெஞ்சம்
ஆற்றாமல் நல்லுலக ஆசையினால் மீண்டுமொரு
காற்றோடு போனேன் கரைந்து.