பக்கம் எண் :

134கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

தக்கார்தம் நெஞ்சமெலாம் தாம்பி றந்த
      தாய்நாட்டின் நலம்நினைக்கும்; குடும்பத் திட்டம்
எக்காலும் தமதுநலத் திட்ட மென்றே
      எல்லாரும் நினைந்தொழுகின் நாடு வாழும்

கருப்படியில் விளையாடிக் களிக்கும் மாந்தன்
      காமமெனும் நெருப்படியில் நின்று கொண்டே
நெருக்கடியைத் தன்வீட்டில் ஆக்கி விட்டு,
      நெடுந்தெருவில் பள்ளிகளில் ஊரில் எங்கும்
நெருக்கடியை ஆக்குகிறான்; ஆள்வோர்க் கென்றும்
      நெருக்கடியை ஆக்குகிறான்; இவனால் நாட்டில்
உருப்படியாய் நலமொன்றும் வளர்வ தில்லை
      ஒளிநெருப்பில் அவன்நலமும் கருகித் தீயும்.

செல்வழியில் இடர்ப்பாட்டை முன்னு ணர்த்தச்
      சிவப்புநிற விளக்கொன்று வைத்தல் போல
இல்வழியில் இடர்ப்பாட்டை முன்னு ணர்த்த
      இருப்பதுதான் முக்கோணச் செவ்வி ளக்கு;
நல்வழியில் நடந்துசெல நினைவோர் அந்த
      நலம்பயக்கும் ஒளிவிளக்கைத் துணையாக் கொள்வர்;
சொல்வழியைக் கேளாரேல் விளக்கி ருந்தும்
      தோண்டுகுழி வீழ்ந்தழியும் மூடர் ஆவர்.