17 முன்னறிவிப்பு எண்சீர் விருத்தம் தனிமையிலே ஒருவெள்ளி கிழக்கு வானில் தகதகத்துக் கண்சிமிட்டி நிற்க எங்கள் இனிமையது வளர்ந்துவரக் கண்டோம்; ஆனால் எங்கிருந்தோ ஒருகோழி கூவக் கேட்டோம்; நனிமகிழும் எமக்கிரவு கழிந்த தேயோ? நலமறியாக் குரற்கோழி வாய்தி றந்தால் இனிவிடியல் வருமென்னும் அறிவிப் பன்றோ? எனமயங்கி அதன்குரலை வெறுத்து நின்றோம். இன்பத்தின் பங்காளி யாகி நின்றாள் இணைவிழிக்குள் படர்ந்திருக்கும் நிறத்தை விஞ்சப் பொன்பற்றி உருக்கியதை வார்த்த தைப்போல் புதியநிற எழிற்கோலம் அடிவா னத்தைப் பின்பற்றிப் பரவியது; பூமி யெங்கும் பேரொளியை வீசுதற்குப் பகலோன் வந்தான் முன்முற்றக் கதவதனைத் திறந்து வைத்தோம் முகிழ்த்துவரும் காதலுக்குக் கதவ டைத்தோம் இவ்வண்ணம் வாழுங்கால் ஒருநாள் என்றன் எழிலரசி வந்தென்பால் குழைந்த வண்ணம் ‘கைவண்ணம் முன்னையினுஞ் சுவைக்கும் வண்ணம் காய்வண்ணஞ் சமைத்துள்ளேன் உண்ணும்’என்று; |