பக்கம் எண் :

136கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

மெய்வண்ணம் அழகேறும் வண்ணம் வந்தாள்;
      மேலெண்ணம் யாதோஎன் றையங் கொண்டேன்;
ஐவண்ணப் பட்டொன்று பார்த்தா ளென்ற
      அறிவிப்பின் வண்ணமெனப் பின்பு ணர்ந்தேன்.

ஒருநாள்நான் வாய்குமட்டி மயங்கி நின்றேன்
      உதவாத பித்தத்தின் அறிவிப் பென்றாள்
இருநாளும் அருகிருந்தே இஞ்சிச் சாற்றை
      எலுமிச்சைச் சாற்றுடனே கலந்து தந்தாள்;
மறுநாளவ் வேந்திழைவாய் குமட்டக் கண்டேன்
      மாதுனக்கும் பித்தத்தின் அறிவிப் பென்றேன்;
தெரியாதோ இதுகூடப் போங்க ளத்தான்
      தெரிவையரைத் தாயாக்கும் அறிவிப் பென்றாள்.

மக்கள்மெய் தீண்டுதல்நம் உடலுக் கின்பம்
      மற்றவர்தம் மொழிகேட்டல் காதுக் கின்பம்
இக்குறளின் பொருளினிக்குஞ் செய்தி சொன்னாய்
      ஏந்திழையே வாழியநீ; எனினும் ஒன்றை
அக்கறையோ டுனக்குரைத்தல் கடமை யாகும்;
      அங்கேபார் சுவரெல்லாம் முக்கோ ணங்கள்!
அக்குறிதான் நம்குடும்ப நலத்தைக் காக்கும்
      அறிவிப்பாம் அளவறிந்து பெறுதல் வேண்டும்.

பெறுவதற்குள் முக்கோண நினைவு வந்து
      பிதற்றுகிறேன் எனமூக்கில் விரலை வைத்தாய்!
கருவயிற்றாய் முன்னுணர்ந்து நடவா விட்டால்
      கன்னத்தில் விரல்வைப்பாய் பின்னை நாளில்;
திருமணத்தை நடத்திடுவோர், குடும்பப் பாங்கைத்
      தெரிந்துநலம் பெறவிழைவோர் நெற்றி மீது
விரல்வைத்துச் சிந்திக்கும் பழக்கம் பெற்றால்
      விடிவுண்டு நாட்டுக்கும் நமக்கும் என்றேன்.