138 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
18 இருண்ட வீடு வரம்பெல்லாம் கதிர்வளைந்து முதிர்ந்தி ருக்கும் வயல்தந்த மணிகுவியும் களஞ்சி யங்கள் வரம்பில்லாச் செல்வங்கள், தென்றல் வீசும் வளமனைகள், குறிப்புணர்ந்து பணிகள் செய்வோர், நிறங்குன்றாப் பொன்னணிகள் முதலா யாவும் நிறைந்ததொரு வாழ்வெனினும் பிள்ளை இன்றேல் நரம்பில்லா யாழாகும்; உயிர்த்த லில்லா நன்மண்ணாற் புனைந்தஎழிற் பாவை யாகும். பளபளக்கும் வெண்ணிறத்துச் சுவர்கள், நான்கு பக்கத்தும் நின்றொளிரும் பளிங்குத் தூண்கள், வழுவழுப்புத் தரையின்மேல் வண்ணப் பூக்கள் வகைவகையாச் செய்திருக்கும் பளிங்குக் கற்கள், குளுகுளுத்த தென்றல்வரும் சாள ரங்கள் கொண்டிலங்கும் மாமனைதான்; எனினும் அங்கே தழுதழுத்த மொழிபேசும் பிள்ளை ஒன்று தவழ்ந்திலதேல் மலரில்லாச் சோலை யாகும். பெற்றெடுத்த பிள்ளையினைத் தொட்டு ணர்ந்து பெறும்பயனைப் பெற்றிலதேல் என்ன கையோ? சிற்றுருவப் பொற்சிலையைத் தூக்கித் தூக்கித் திளைத்தின்பம் அடையாத்தோள் என்ன தோளோ? |