முற்றிவரும் செழுந்தேனைப் பொழியும் வாயின் முத்தங்கள் பெற்றிலதேல் என்ன கன்னம்? கற்றவர்க்கும் பொருள்விளங்கா மழலை கேளாக் காதினர்க்குச் செவியி;ருந்தும் பயன்தான் என்ன? உழைத்தலுத்து வருவோர்க்குக் களைப்பை நீக்கி உள்ளத்துக் கவலைக்கும் மருந்தாய் நிற்கும்; பிழைப்புக்கு வழியறியாக் குடிலுக் குள்ளும் பெருஞ்செல்வங் குவிந்தமனைக் குள்ளும் அன்பு தழைத்திருக்க ஏற்றிவைக்கும் ஒளிவி ளக்காம்; தவழ்ந்துவரும் மகவிலையேல் எந்த வீடும் செழித்திருக்கக் கண்டதிலை இருண்டே தோன்றும்; சிரிப்பொலியின் எதிரொலியும் கேட்ப தில்லை; இசையினிமை பயக்கும்யாழ் பிள்ளை என்றேன்; எல்லையின்றிப் பெறின்வாழ்வே உடைந்த யாழாம்; நசைமிகுந்த பேசும்பொற் சிலையைக் கொண்ட நல்லதொரு வீடொன்றே கோவில் என்றேன்; திசைகடந்து வரம்பதனை மீறி விட்டால் சிதறுண்டு பாழ்பட்ட மண்ட பந்தான்; பசிமிகுந்த கூக்குரலே கேட்கும் அங்கே பண்ணொலியோ யாழொலியோ கேட்ப தில்லை. எட்டென்றும் பத்தென்றும் பெற்று விட்டால் எடுத்தணைக்கும் கைகளிலே இன்பம் உண்டோ? தொட்டெடுத்துத் தோள்வைத்துச் சுமப்ப தென்றால், சுமையாகத் தோன்றுமலால் இன்பம் ஏது? சுட்டெரிக்கும் பசிக்கொடுமை வாட்ட வாடித் துவண்டிருக்கும் கன்னத்தில் முத்த மெங்கே? பட்டென்றும் பசியென்றும் கேட்டுக் கேட்டுப் பதறியழும் அழுகுரலே செவியிற் கேட்கும். |