பக்கம் எண் :

140கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

கவலைக்கு மருந்தாகும் பிள்ளை; ஆனால்
      கணக்கின்றிப் பிறந்துவிடின் அதுவே உள்ளக்
கவலைக்கு விருந்தாகிச் சலிப்பை ஊட்டும்;
      காப்பதற்கு வழியின்றித் தவிக்கச் செய்யும்;
உவமைக்கு விளகென்று சொல்வ ரேனும்
      ஒருவர்க்குப் பலமகவு பிறந்து விட்டால்
அவலத்தைக் காண்பதலால் ஒளியா தோன்றும்?
      அவர்அகத்தில் களிப்பேது? சிரிப்பும் ஏது?

கதிரவனும் நிலாமகளுங் கூடிப் பெற்ற
      கணக்கில்லாப் பிள்ளைகள்தாம் விண்மீன் கூட்டம்;
அதிகஒளி அக்கூட்டம் பெற்ற துண்டோ?
      அங்கங்கே மின்மினிபோல் ஒளிரக் கண்டோம்;
புதியவழி பின்பற்றித் திட்ட மிட்டுப்
      புகுகின்ற மனமின்றிப் பெருக்கி விட்டால்
மதிமயங்கி ஒளிகுறைந்து துயரந் தோய்ந்து
      வழியறியா இருட்டறையாய்ப் போகும் வீடு.