146 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
22 நிலமகளா கொடியவன்? நீதியொடு குடிமக்கள் நலம்நி னைக்கும் நெஞ்சுடையார் மூவேந்தர் ஆண்டி ருந்தார்; ஆதியிலவ் வாட்சிக்கு நிகரே யில்லை; ஆயினுமப் பரம்பரையின் பெயரு ரைக்க நாதியிலை; ஏனில்லை? நிலம டந்தை நலம்வேட்டுத் தமக்குள்ளே போர்தொ டுத்து மோதியதால் அழிந்தொழிந்தார் அந்தோ! அந்த மூவரசை யழித்தவளைக் கொடியன் என்பேன். வடபுலத்து மன்னரையும் விட்டா ளல்லள் வாழ்விழந்த பாண்டவர்க்கும் நூற்று வர்க்கும் கெடுமனத்தைப் பகையுளத்தைத் தந்து நின்றாள் கிளைஞருக்குள் பகைமூட்டி அழித்தொ ழித்தாள்; அடுகுணத்துச் செஞ்சீனர் அண்டை நாடர் அகப்பகையாய் நமதுபனி மலையின் பாங்கர் இடர்விளைக்க வழியமைக்கச் செய்த வள்யார்? இழிபழியை அவர்க்களித்தாள் அவளே யன்றோ? உலகத்தை ஒருகுடைக்கீழ் ஆள எண்ணி ஒவ்வாத போர்வெறியர் உலகில் யாண்டும் கலகத்தை விளைவித்துப் போர ரக்கன் கடுவாயில் போய்வீழ்ந்தார்; அவரை எல்லாம் இலவுக்குக் காத்திருந்த கிளிபோ லாக்கி ஏலாத பேராசை உள்ளத் தூட்டி நலமழித்த நிலமகளை எப்பேர் சொல்லி நானழைப்பேன்? மாபாவி என்ப தல்லால். |