பாவமவள்! நிலமகளா குற்றஞ் செய்தாள்? பாராள வந்தவர்தாம் குற்றஞ் செய்தார்; யாவுமவர் ஆசையினால் வந்த தீமை அதற்கவளா பொறுப்பாளி? இல்லை இல்லை; காவலர்கள் *பிறர்க்குரியாள் தோள்வி ழைந்தார் கருத்தழிந்தார் உருத்தெழுந்தார் தானே மாண்டார்; மேவுகின்ற ஆடவர்தாம் நல்ல ரானால் மெல்லியலாம் நிலமகளும் நல்லள் ஆவாள். நிலமகளின் ஆசையினாற் கொடிய மாந்தர் நெடுகிலுமே செய்தீமைக் களவே யில்லை; பலவுயிரும் பலபொருளும் பிறப்ப திந்தப் பரந்துபடும் நிலத்திற்றான்; பின்னர் அந்தக் குலமுழுதும் மறைந்தொடுங்கி மாய்வ தெல்லாம் கூறுமிந்த நிலத்திற்றான்; இதைம றந்து நிலமுழுதும் தாமுண்ண முயலு கின்றார் நிலையாகத் தமதென்றும் எண்ணு கின்றார், பெரும்பொருளும் உயர்மனையும் வயலும் இன்னும் பேறனைத்தும் பெற்றாலும் இறுதிக் காலம் வரும்பொழுது மனிதனுக்குச் சொந்த மென்று வாய்த்தநிலம் ஆறடிதான்; அதைம றந்து வரும்மனிதன் வாழ்வெல்லாம் பிறர்நி லத்தை வளைப்பதற்கே முயல்கின்றான்; வளைத்த பின்னும் அரும்புகிற ஆசையைத்தான் காட்டு கின்றான் ஆசைக்கோர் அளவில்லை அதனாற் போலும்.
* பிறர்க்குரியாள் - பிறர்க்குரியநிலமகள் |