பக்கம் எண் :

148கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

தோண்டுங்காற் பொன்தருவாள் சோர்வ கற்றித்
      துளைத்தெடுத்தால் தந்திடுவாள் எண்ணெய்; மேலும்
வேண்டுங்கால் நிலக்கரியும் ஈவாள்; ஆழ
      வெட்டுங்கால் புனல்தருவாள்; ஆழ்ந்த கழ்ந்து
கீண்டுங்கால் இரும்புமுதற் கனிக ளெல்லாம்
      கிடைக்கஅருள் நல்கிடுவாள்; ஏர்மு கத்தால்
தீண்டுஞ்சால் வழியெல்லாம் பயிர்கள் காட்டிச்
      செழித்திருப்பாள் வளமெல்லாம் கொழித்தி ருப்பாள்

கனிதருவாள் காய்தருவாள் வாழும் வண்ணம்
      காலமெலாம் உயிர்தருவாள்; உடல்வ ருத்தி
இனிதருளும் ஈகையினால் அவளை *வள்ளி
      எனுஞ்சொல்லாற் புகழ்ந்துரைக்க ஆசை தோன்றும்
நனிமுயன்றே பாடுபடின் பொருளை வாரி
      நல்கிடுவாள்; உழைப்பின்றி அயர்ந்து நின்றால்
முனிவுகொடு பொருள்குறைப்பாள்; உழைப்ப றிந்து;
      முதல்கொடுக்கும் முதலாளி என்றுஞ் சொல்வேன்;

நமக்கென்றே இருப்பவளை வாழ்நா ளெல்லாம்
      நலிவுறுத்தி வருகின்றோம்; தலையி டத்துச்
சுமக்கவென மரம்வைத்தோம் மனைகள் கட்டத்
      தூண்வைத்தோம் கல்வைத்தோம் காலும் வைத்தோம்
எமக்கென்ன என்றவள்மேல் உமிழு கின்றோம்
      இரும்பெடுத்தே அவளுடலை அகழு கின்றோம்
சுமக்கின்றாள் பொறுக்கின்றாள் பொறுமை சாலி
      தொழிலாளி போலிருக்குந் திறமை சாலி.


* வள்ளி - வள்ளன்மையுடையவள்