மெல்லத்தன் உயிர்த்துடிப்பே அடங்கும் வண்ணம் மேனியிலே எரியூட்டிக் கொண்ட தோழர் வெல்லத்தான் மொழிப்போரில் தமைக்கொ டுத்தார் வியப்புமிகும் அத்துடிப்பே இன்றும் வேண்டும் துடிக்கட்டும் உமதுமனம்; தமிழ்மொ ழிக்குத் துளியேனும் பகைவருமேல் தூள்தூ ளாக வெடிக்கட்டும் அப்பகைமை; தமிழர் நெஞ்சம் விழிக்கட்டும்; இந்திமொழி ஆதிக் கத்தை முடிக்கட்டும் இன்றோடு; கூடி எங்கும் முழங்கட்டும் தமிழ்முழக்கம்; தமிழர் கைகள் அடிக்கட்டும் போர்முரசு; பகைவர் கூட்டம் அலறட்டும் சிதறட்டும் அஞ்சி நின்றே. |