பக்கம் எண் :

150கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

23
போலிக் குடும்பம்

கலிவெண்டபா

காற்றையே விஞ்சுங் கடுவேகங் கொண்டிலங்கும்
மேற்றிசையார் தந்தஒரு மேலான ஊர்திதனில்
முன்னே கணவன் முறுக்கோ டமர்ந்திருப்பான்
பின்னே மனையாள் பெருமிதத்தில் வீற்றிருப்பாள்
வேகத்தால் ஆடை விலகுவதும் தான்ஓராள்
மோகத்தி னுள்ளே முழுகி எழுந்தவள்போல்
கையொன்றால் சுற்றிக் கணவன்றன் மெல்லிடையை
மெய்யொன்றச் சாய்ந்து மிடுக்கோ டணைத்திருப்பாள்
கட்டிப் பிடித்துக் களிப்போடு போமிவரை
எட்டி நடப்போர் இருகண்ணால் பார்த்திருந்(து)
“ஒட்டி உறவாடும் உள்ளன் புடையரிவர்!
விட்டுப் பிரியாத விந்தைமிகும் அன்றிலிவர்!
ஈதன்றோ நற்குடும்பம்! இக்குடும்பம் போற்குடும்பம்
யாதொன்றுங் கண்டதிலை” என்றே நயந்துரைப்பார்
போகும் வழிப்படுவோர் போற்றிப் புகழ்ந்துரைக்க
வேகம் மிகக்கொண்டு வீதியெலாஞ் சுற்றியபின்
வீட்டிற் புகுந்தவுடன் வேகங் குறைந்துவிடும்
ஏட்டிக்குப் போட்டி! எலிபூனை ஆகிடுவர்;
சீறி விழுவார் சிறிதேனும் அன்பறியார்