மாறி நடப்பார் மனைவி கணவனெனும் பேரைக் கடப்பார் பெருமைமிகும் இல்லறத்தின் சீரை ஒருசிறிதும் சிந்தித்துத் தாம்நடவார்; காட்சிக் குடும்பமெனக் கட்டுரைப்ப தன்றிஇது மாட்சிக் குடும்பமெனும் *மாற்றஞ் சொலப்படுமோ? மாலை முடித்த மணவாளன் தான்கொண்ட வேலை முடித்துப்பின் வீடு திரும்புங்கால் மாலை யடுத்திருக்கும் மங்கிருளும் சூழ்ந்திருக்கும் சீலை யுடுத்திருக்குஞ் சேயிழையாள் மட்டுமிராள்; மெய்சோர்ந்து கைசோர்ந்து மேலும் மனஞ்சோர்ந்து சோர்ந்து வந்தானைப் பார்த்து வரவேற்க, உண்ணுஞ் சுவைநீர் உவந்து கொணர்ந்துதர. எண்ணங் களிக்க, இனிய மொழிசொல்ல, இல்லாள் மனையகத்தே இல்லா நிலைகண்டு நல்லான் அருகிருந்த நாற்காலி மேலமர்ந்தான்; தொங்குசிறு பையொன்று தொங்குகிற கையுடையாள் தங்குமொரு சிற்றுடையுந் தாங்காத மெய்யுடையாள் வெள்ளைப் பொடியால் விளங்கும் முகமுடையாள் அள்ளிச் சுருட்டி அமைத்த குழலுடையாள் ஆடி அசைந்தே அழகுமயில் போல்வருவாள்; வாடி அமர்ந்திருப்போன், வந்தாள் முகம்நோக்கி, “எங்குநீ சென்றிருந்தாய்? இந்நேரம் ஆனபினும் தங்கி வருவதுமேன் தையால்” எனக்கேட்டால் “மாதர்கழ கத்தில் மனைவிமார் தங்கடமை ஓதுதற்குச் சென்றிருந்தேன் ஊர்மெச்சப் பேசிவந்தேன்; கற்பென்றா லென்ன? கணவன் உரிமைஎன்ன?
*மாற்றம் - சொல். |