பக்கம் எண் :

152கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

பொற்புடைய மாதர் பொறுப்பென்ன? என்றெல்லாம்
சொற்பொழிவு செய்தேன் சொலற்கரிய கைதட்டல்!
அற்புதமே என்ன அமைந்துவிட்ட” தென்றுரைப்பாள்
இப்படியும் நாட்டில் இயங்கும் குடும்பங்கள்
பற்பலவும் இந்நாளில் பார்த்தல் எளிதாகும்;
செல்வப் பெருக்காலுங் கல்விச் செருக்காலும்
பல்வகைய நாகரிகப் பாங்குக்கும் ஆட்பட்டுச்
சீரழிந்து போன சிலகுடும்பம் உள்ளதனை
ஊரறியும் நாடறியும்; ஒவ்வாக் குடும்பமிது;
மண்ணில் அடிவைக்க மாட்டாமல், உண்டவரை
விண்ணில் மிதக்கவைக்கும் விந்தைக் குடிபழகி
வந்தோன் குடும்பம், வருகின்ற நாளெல்லாம்
நொந்தே அழியும்; நொடிப்பொழுதும் இன்பமிலை;
கட்டிவந்த தன்மனையாள் கன்னம் முதுகெல்லாம்
கொட்டிவரும் மத்தளந்தான் கொண்டவன் கைகளுக்குத்
தற்கொண்டான் கொட்டுகிற தாளந் தவறாமல்
இற்குரியாள் ஓவென் றிசைப்பாள் அவலப்பண்;
பாழுங் குடியாற் பழுதுபடும் அக்குடும்பம்
நாளும் இளிவரலால் நைந்துபடும்; அவ்வில்லில்
வீரம் இருக்கும் வெகுளி உடனிருக்கும்
நேரஞ் சிறிதானால் நீள்அழுகை தானிருக்கும்
அச்சம் இருக்கும் அடுத்து நகையிருக்கும்
மெச்சும் உவகையதும் மேவிக் கலந்திருக்கும்
எண்சுவையுங் கூடி இயங்குமொரு நாடகத்தைப்
பண்சுவையுஞ் சேர்த்துப் படைக்கும் மதுக்குடும்பம்;
கல்லாக் குடும்பத்துங் கற்ற குடும்பத்தும்
எல்லாக் குடும்பத்தும் இச்சிறுமை காண்பதுண்டு;