பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்153

வையத்துள் வாழ்வாங்கு வாழாத ஓர்குடும்பம்
நையப் புடைக்கும் நரகம் எனவாகும்;
எங்கோ நரகொன் றிருக்கின்ற தென்றுரைப்பார்
இங்கேதான் அந்த இடர்நரகுங் காண்பதுண்(டு)
இல்லாள் மனைமாட்சி இல்லாளேல் அவ்வாழ்க்கை
பொல்லா நரகாகும் பொன்றாத் துயராகும்;
பேரின்ப வீடெனவும் *பீழை யுறுநரக
ஊருண் டெனவும் உரைத்திடுவர் கண்டதிலை;
ஆனாலும் நம்மருகில் அவ்விரண்டும் உண்டென்று
காணா தலைகின்றோம் கண்ணிருந்துங் காணுகிலோம்!
போலித் தனமெல்லாம் போற்றித் திரியாமல்
வேலிக்குள் நின்றே விளைபயனைத் துய்த்திடுவோம்
அன்பே துணையாக ஆற்றுங் குடும்பத்தில்
இன்பம் நிலைக்கும் இனிது


பீழை - குற்றம், துன்பம்.

- மன்னர் கல்லூரி
சிகங்கை
29.1.1972