154 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
24 சமுதாய வீதியிலே எண்சீர் விருத்தம் சாதிமதம் வேர்விட்டுக், கூடி நின்ற சமுதாயம் சீர்கெட்டுப், பிளவு பட்டு, மோதிவரும் பகையுற்றுத் தாழ்வும் உற்று முன்னேறும் நெறிகெட்டு, மிடியும் பட்டு, *மேதியினும் கீழாகி, உணர்வு கெட்டு, மேலான மதிகெட்டு, மானம் விட்டு, மேதினியில் அடிமைஎன உரிமை கெட்டு, மெய்சுமந்து மாந்தரென வாழ்ந்து வந்தோம். **மண்சுமந்த தோள்களிலே வீரங் கொண்ட மாமன்னர் வழிவந்தோர், சங்கம் ஏறிப் பண்சுமந்த பாடலினால் உலகை யாண்ட பாமன்னர் வழிவந்தோர், தமிழ மாந்தர்; கண்சுமந்து வந்தாலும் பார்வை கெட்டுக் காலிடறி வீழ்ந்தனரே என்று நெஞ்சில் புண்சுமந்து நொந்தெழுந்து புரட்சி செய்யப் பொங்கிஎழுந் தரியேற்றைப் போல வந்தார்,
*மேதி - எருமை **மண்சுமந்த - நிலத்தை ஆண்ட |