பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்155

வெண்தாடி வேந்தரவர், ஐயா என்றே
      விழைந்தழைக்கும் கிழவரவர், பெரியார் என்றே
பண்பாடிப் போற்றுகின்ற தலைவர், எங்கள்
      பகுத்தறிவுப் பகலவனார், தமிழர் பண்பு
மண்மூடிப் போகாமல் காக்க வந்த
      மாவீரர், பாழ்பட்ட சமுதா யத்தின்
கண்மூடிப் பழக்கத்தால் எழுந்த கோட்டை
      கலகலத்தே இடிந்துவிழச் செய்த தீரர்.

அப்பெரியார் திருப்பெயரைத் தலையில் தாங்கி,
      *ஆளுடைய பிள்ளையிவர் அரவ ணைப்பால்
ஒப்பரிய நடைமுறையில் இயங்கு கின்ற
      ஒளிநிறுவுங் கல்லூரி யதனிற் கல்வி
**தப்பிரியப் பயில்கின்ற இளைஞர் நீவிர்
      சமுதாயச் சிந்தனையை மனத்திற் கொண்டீர்;
அப்பெரிய மகிழ்ச்சியினால் வாழ்த்து கின்றேன்
      அடடாஓ சமுதாயம் வாழும் என்றே.

எதைஎதையோ சிந்திக்கும் இளைஞர் கூட்டம்
      இருக்கின்ற நிலைகண்டு வருந்தி நெஞ்சம்
பதைபதைக்கும் இயல்புடையேன் ஆனால் நீவிர்
      பயனுள்ள சிந்தனைக்கு வந்து விட்டீர்;
இதைநினைந்து மகிழ்கின்றேன்; இன்று நீங்கள்
      இளைஞரெனும் நிலையிலுளீர், நாளை நாட்டின்
விதையனையீர், வேரனையீர், வளர்ந்த பின்னர்
      விடுதலையின் பயன்நுகரும் தலைவர், ஆவீர்.

இன்றுள்ள சமுதாய வீதி தன்னில்
      எங்கேனும் நல்லொழுக்கம், உரிமை வேட்கை
ஒன்றுள்ள தாவென்று தேடிப் பார்த்தேன்;
      ஒளிந்திருக்கும் இடங்காண முடிய வில்லை;


*ஆளுடையபிள்ளை - கல்லூரிமுதல்வரின் பெயர். **தப்பு இரிய - பிழை நீங்க