பக்கம் எண் :

156கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

நன்றுள்ள பொதுநலந்தான் மாந்தர் நெஞ்சில்
      நலம்பெற்று வளர்கிறதா என்று பார்த்தேன்;
நின்றுள்ள நிலைகாணேன்; தன்ன லந்தான்
      நிலைபெற்றுக் கோலோச்சக் கண்டு நொந்தேன்.

வீதியிலே சமுதாயம் நிற்கக் கண்டேன்
      விலைபேசிப் பண்பாட்டை விற்கக் கண்டேன்;
போதனையே செய்வாரைக் காணு கின்றேன்
      புகன்றபடி ஒழுகுபவர் எவருங் காணேன்
ஏதினிமேல் நல்வாழ்வு? மாந்தர் நெஞ்சில்
      இருளகன்று சுடரொளிதோன் றாதோ? என்று
வேதனையே கொள்கின்றேன் நிலையிற் கெட்ட
      விலங்கியல்பு மானிடரை நினையும் போது;

போலிகளே சமுதாய வீதி தன்னில்
      பொன்னோடும் புகழோடும் உலவல் கண்டேன்;
மாலையெலாம் அவர்பெறுவர் மதிப்பும் கொள்வர்;
      மாமேதை என்றெல்லாம் விருதும் கொள்வர்;
மேலவரோ எள்ளலுற்றார். ஏசல் பெற்றார்,
      மிதிபடுமோர் பொருளானார், தாழ்வே கண்டார்;
*சாலியிலே பதருக்கு மதிப்பைக் கண்டேன்
      சாறறியா வெம்பலுக்கும் மதிப்பைக் கண்டேன்

சீர்கெட்ட சமுதாய வீதி தன்னில்
      சிவப்புநிற விளக்குகளே ஒளிரக் கண்டேன்
கூர்கெட்ட மாந்தருக்கு நெறியைக் காட்டிக்
      கூப்பிடுமோர் பச்சைநிற விளக்கைக் காணேன்;
தேர்விட்ட நெடுந்தெருவில் மேடு பள்ளம்
      தெரியாமல் படர்கின்ற புதர்கள் கண்டேன்;
வேர்கெட்ட எட்டிக்கு நீரை வார்த்தார்
      விழலுக்கே நீர்பாய்ச்சும் பேதை மாந்தர்.


* சாலி - நெற்பயிர்