கடவுளென வேதமெனச் சாத்தி ரங்கள் காட்டுகிற நெறிகளெனச் சொல்லிச் சொல்லி மடமையிலே மூழ்கிஒளிர் மதியைத் தேய்த்து மாந்தரையே மாற்றுகிற கயமை கண்டேன்; இடமுடைய மண்மீதில் நடப்ப தற்கோர் ஏற்றநெறி காட்டாமல் விண்ணை நோக்கிப் படர்வழியைக் காட்டுகிறார்; காவி ரித்தாய் *பாலிருந்தும் கானலையே காட்டல் கண்டேன். ஒருத்தியென ஒருவனென உரைத்த காதல் உயர்வாழ்வை அகப்பொருளென் றொருபேர் தந்து பொருத்தமுற நம்முன்னோர் உரைத்து வைத்தார்; புதியஅலை எனும்பெயரால் படமெ டுப்போர் கருத்திலராய்ப் புறப்பொருளா மாற்றி விட்டார் காசுக்கு வளைவதற்குக் கூசாப் பெண்டிர் உருத்தெரிய மேனியெலாம் உலர விட்டால் உருப்படுமோ சமுதாயம்? என்று நொந்தேன் கலைக்கோட்டம் என்றிருந்தேன் காமக் கோட்டக் கதவன்றோ திறந்துவிட்டார்; இளைஞர் அந்தப் புலைக்கோட்டம் புகுவதற்கே ஆசைப் பட்டுப் பொல்லாத கனவுகளைக் கண்டு கெட்டார்; வலைக்கோட்டு மானினம்போற் சிக்கிக் கொண்ட வஞ்சியரும் தறிகெட்டுத் திரிதல் கண்டேன்; விலைப்பாட்டுக் கவிஞரெலாம் எழுதும் பாட்டை விலைமாதும் கேட்பதற்குக் கூசி நிற்பாள். காதலெனும் மென்மலரைக் கசக்கி மோந்து காட்டுகிற திரைப்படங்கள் உலவி வந்தால் ஏதமுறத் தோலுரித்துக் காட்டும் பாங்கில் எழுதிவரும் திரைப்பாட்டைக் கேட்டு வந்தால் தீதகலக் காந்திநபி ஏசு புத்தர் தெருத்தெருவா நின்றிருந்து போதித் தாலும் ஓதுபயன் உண்டாமோ? தணிக்கை செய்வோர் ஒளிபெற்ற கண்பெற்றால் நன்மை உண்டாம்.
* பாலிருந்தும் - பக்கத்திலிருந்தும் |