பக்கம் எண் :

158கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

25
திரையுலகக் கற்பு

கலிவெண்பா

தென்னாட்டுப் பண்பனைத்துஞ் சேர்த்தெடுத்துக் காணுங்கால்
இந்நாட்டுக் கற்புநெறி ஈடில்லாப் பொற்புநெறி
என்றே இலக்கியங்கள் எக்காலும் ஓதிவரும்;
இன்றோ அதன்நிலைதான் ஏளனத்தின் கூடாரம்!
ஏற்றமிகும் கற்புநெறி இங்கே திரையுலகில்
நாற்றம் எடுத்தொழிய நாடகங்கள் ஆடுகின்றார்;
யாரும் அறியா தகத்தே நிகழ்வதெலாம்
பாரும் எனக்காட்டிப் பண்பை அழிக்கின்றார்;
கூடும் அகத்திணையைக் கூத்தாட்டக் காரரிவர்
ஆடும் புறப்பொருளை ஆக்கிப் படைக்கின்றார்;
மேடை மிசையேறும் மெல்லியலார் நல்லுடலில்
ஆடை அணிவதற்கே அச்சப் படுகின்றார்;
சுட்டெரிக்கும் போதில் சுருண்டுவிழும் ஓர்புழுப்போல்
வட்டமிட்டு மேனி வளைத்து நெளிந்தவர்தாம்
தாயாகும் பண்பைத் தவிடுபொடி யாக்கிவிட்டுப்
பேயாட்டம் ஆடிப் பெரும்பழியைச் சேர்க்கின்றார்;
கற்புநெறி யிங்கே கடைச்சரக் கானதலால்
மற்றபடி உண்டோ மதிப்பு?

- 1.3.1970