பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்159

26
வாழ்வுப் பாதையில் - பக்தி

‘ஆண்டவனே எனைக்காக்க உன்னை யன்றி
      ஆருள்ளார் இவ்வுலகில்? வேண்டி நிற்போர்
வேண்டுவதை வேண்டியவா றளித்துக் காத்து
      வினைதீர்க்க வல்லவனே! கருணை நெஞ்சம்
பூண்டவனே! பொன்பொருள்கள் போகம் ஈவோய்!
      புத்தாண்டுப் பிறப்புக்குப் பரிசுச் சீட்டு
வேண்டியவை வாங்கியுளேன்; மற்ற வர்க்கு
      வீழாமல் தடுத்ததனைக் காப்பா யப்பா!’

‘பரிசென்றால் ஒன்றிரண்டா? பத்து லட்சம்!
      பகவானே உனைநம்பி வாங்கி யுள்ளேன்
அரசென்றால் ஈதன்றோ அரசு! நல்ல
      ஆண்டவனும் நீயன்றோ? பத்து லட்சம்
பரிசொன்றும் எனக்குவரச் செய்து விட்டால்
      பாரிலுனை எந்நாளும் மறக்க மாட்டேன்;
வரிசையுடன் வெள்ளிவிளக் கொன்று வாங்கி
      வைத்திடுவேன் சந்நிதியில்; அருள்வா யப்பா!’

ஆண்டவன்முன் இவ்வண்ணம் வேண்டி நிற்கும்
      அடியர்பலர் கோவிலுக்கு வந்து செல்வர்;
ஈண்டவர்தம் செயலெல்லாம் பக்தி என்றால்
      இனியுலகம் ஏற்காது வெறுத்துத் தள்ளும்;
வேண்டுகிற பரிசிலது மற்ற வர்க்கு
      விழவேண்டா என்னுந்தன் னலமா பக்தி?
காண்டகுநல் லின்பமெலாம் வையம் பெற்றுக்
      களித்திடுக என்பதன்றோ பக்தி யாகும்