160 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
கையூட்டுத் தருவதுவா கடவுள் பக்தி? காசுபணம் தந்ததனால் பங்குக் காக நெய்யூற்றும் விளக்கொன்று தரலா பக்தி? நினைந்தழுங்கும் காசுபண வெறியா பக்தி? பையூட்டம் பெறுவதற்குக் கடவுள் முன்னே பத்துலட்சம் பத்துலட்சம் எனலா பக்தி? பொய்யூட்டும் வாணிகத்தைக் கோவி லுக்குள் புகுத்துவதும் ஏய்ப்பதுமா நல்ல பக்தி? முற்றிநலம் பழுத்திருக்கும் அன்பி னைத்தான் மொழிந்திடுவர் பக்தியென உணர்ந்த நல்லோர் பற்றியெழும் அவ்வன்பால் உளமு ருக்கிப் பண்படுத்திக் கொள்வதுதான் பக்தி யாகும்; பற்றுடனே மாந்தரிடம் அன்பு செய்யப் பயிலாமல் கடவுளுக்குப் பூசை செய்தால் உற்றவனும் ஏற்பதில்லை; உலகந் தானும் ஒருபோதும் பக்தியெனக் கொள்வ தில்லை. கைவிரல்கள் செபமாலை உருட்டும், மெய்யில் கால்வரையும், நீண்டதொரு சட்டை தொங்கும், உய்வழிகள் மற்றவர்க்கே அவர்வாய் ஓதும், உளக்குறிப்பை முகத்தாடி மறைத்துக் காட்டும், பொய்விளையும் நெஞ்சத்தை மறைக்கும் சின்னம் பொலிவுடனே அசைந்தாடி மார்பில் தொங்கும்; செய்வினைகள் திரைமறைவில் கயமை காட்டும்; திரிகின்றார் பக்தியெனும் பசுத்தோல் போர்த்து. மெய்யான மண்டலங்கள், மறுமை யின்பம், மேலுலகம், என்றெல்லாம் நமக்குக் கூறிப் பொய்யான வேடத்தால் உலகை ஏய்க்கும் புரட்டர்களின் நடிப்பைப்போய் பக்தி என்றால் அய்யய்யோ ஆண்டவனே நைந்து போவான்; ‘ஆத்திகரின் நாத்திகரே மேலாம்’என்பான், ‘செய்யாத செயல்செய்யும் கொடிய ரெல்லாம் சேர்ந்திருக்கும் மறைவிடமா பக்தி’என்பான். |