வட்டிக்கு வட்டியென்று வாங்கி, ஏழை வயிறெரிய நெஞ்செரிய அவன்றன் வாழ்வில் பட்டினிக்கு வழிவகுத்துச் சுரண்டிச் சேர்த்துப் பாடுபடும் அவன்வீட்டில் இருளுண் டாக்கி, விட்டெரிக்கும் மின்விளக்கால் கோவி லுக்குள் வெளிச்சத்தைப் போடுகிறான்; விளக்கின் மேலே ஒட்டுகிறான் தன்பெயரை; விளம்ப ரத்தின் ஒருபகுதி தான்ஈது பக்தி யில்லை. ஏசுசிவன் மால்அல்லா என்ற பேரால் எத்தனையோ உண்டாக்கி வணங்கி நிற்போம்; ஆசையுடன் ஒன்றின்பால் அன்பு கொண்டே அயல்மதத்தை அவ்விறையைத் தாக்கித் தாழ்த்திப் பேசிவரும் மதவெறியில் குறைந்தோ மல்லோம்; பிழையுறநாம் ஏசலெலாம் யாரைச் சாரும்? ஈசனையே சென்றடையும் என்பர் மேலோர் எல்லாமும் அவனாக இருப்ப தாலே. ஓரிறையைப் பலபெயரால் வாழ்த்து கின்ற உண்மைநிலை உணராமல் ஒன்றைத் தாழ்த்தி ஊரறிய வாய்மதத்தால் ஏசி வந்தால் ஒப்புவனோ அவ்விறைவன் பக்தி என்று? வேரரிந்து போட்டுவிட்டுச் செடியை நட்டு விடுகின்ற தண்ணீரால் பயனே இல்லை; ஆறறிவு படைத்துளநாம் கடவுள் என்னும் அன்புருவை நன்குணர்ந்து பேணல் வேண்டும். தொட்டருகில் சென்றுதொழ உரிமை யில்லை; தூரத்தே நின்றுதொழக் கூறு கின்றார்; மட்டவிழும் மலர்தூவித் தாய்மொ ழிச்சொல் வழிபாடு செய்வதற்கும் வழியே யில்லை; |