பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்163

வெள்ளிமணி, தங்கமணி, *அக்கு மாலை,
      வேடத்தால் பொலிகின்ற சமயச் சின்னம்,
வெள்ளமென வருதிரளில் ஓடும் தேர்கள்,
      வீதியிலே கண்டபடி செய்யும் பூசை,
கொள்ளைநிதி மிகத்திரட்டி இறைவன் பேரால்
      கூத்தாடல், எனுமிவைதாம் பக்தி யல்ல;
உள்ளமதில் தூய்மைநிலை இல்லை என்றால்
      ஒவ்வொன்றும் வெளிப்பகட்டுச் செயலே யாகும்.

காயமிது மாயமென்பார், காய கல்பம்
      கண்டருந்தித் தம்முடலைக் காயம் செய்வார்;
மாயமடா இவ்வுலகம் என்பார், நம்மை
      மயக்கிமிகப் பொருள்தொகுக்க மாயம் செய்வார்;
தேயுமடா சிற்றின்பம் என்பார், அந்தத்
      தெரிவையர்தம் நலம்நினைந்தே தேய்வர் நாளும்;
சாயமெலாம் வெளுத்திடினும் மீண்டும் பூசித்
      தம்வாழ்வைப் பக்தியினால் மெருகு செய்வார்.

நிலையாமை உணர்த்துவதே பக்தி என்றால்
      நீணிலத்தை வெறுத்துவிடல் பக்தி யன்று;
நிலையாமை தனையுணர்ந்தே உலக வாழ்வில்
      நிலைத்தசெயல் செய்வதுதான் பக்தி யாகும்;
கலையாமல் தன்மனத்தைக் கட்டுப் பாட்டில்
      கட்டுறுத்துக் கடமைகளைச் செய்வ தொன்றே
உலையாத கண்ணியஞ்சேர் பக்தி யாகும்;
      உலகத்தை விரும்புவதே உயர்ந்த பக்தி.

மேலுலக வாழ்வுக்கு வழியைக் காட்ட
      மேன்மை பெறும் இவ்வாழ்வை மாயம்என்போர்
பாலுடனே முந்திரிகைப் பழங்கள் உண்டு
      பயன்பெறுவர் பணம்பெறுவர் பக்தி என்பர்;


* அக்குமாலை - உருத்திராக்கமாலை